கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர்  பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆவடியில் வசிக்கிறார். மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன், லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு படப்படிப்பும் இளைய மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க சென்றதில் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்கிற குரல் காவல்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் உள்ள வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவிடப்பட்டுள்ள, கவனிக்கத்தக்க பதிவு:

1.வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

2.அவர் பணி ஓய்வு பெரும் வயது வரை முழு சம்பளம் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு தரவேண்டும்.

3.அவரது மனைவிக்கு உடனடியாக குரூம்-2 நிலையில் அரசு வேலை வழங்க வேண்டும்,

4.படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகர் அவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை அரசு செலவில் தரப்பட வேண்டும்,

5.இனிவரும் காலங்களில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க அனுப்பப்படும் போது  சிறப்பு பயிற்சி எடுத்த ஆயுதப்படை காவலர்களை துப்பாக்களுடன் பணிக்கு அனுப்பப்பட வேண்டும்,

6. ஆய்வாளர் பெரியபாண்டியுடன் இரு அதிகாரிகள் மட்டுமே சென்றுள்ளனர்.   இது போன்ற தருணங்களில் குறைந்தது ஒரு உதவி ஆணையர் தலைமையில்  போதிய காவல்படையை அனுப்ப  வேண்டும்,

7.உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சுட்டுப்பிடிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது,

8.வெளிமாநில கொள்ளையர்களை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் அதில் பன்மொழி பேசக்கூடிய காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு பல்வேறு மாநில கள நிலவரங்கள் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளவும் பல மாநில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சிறப்பான வழிவகைகளை உருவாக்கித் தரப்பட வேண்டும்”- இவ்வாறு அந்த வாட்ஸ்அப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசும், காவல்துறை உயரதிகாரிகளும் கவனிக்கவேண்டும்.