சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் பிரசாரம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

அவர்கள் விதி மீறியதாக தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வெற்றிக்கனியை பறிக்க திமுக, அதிமுக, டிடிவி தினகரன் போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலிலும், ஏற்கனவே நடைபெற்றதுபோல தேர்தல் முறைகேடுகள், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில்  அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளர்களுடன் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாலை 5 மணியை தாண்டி அவர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை வீடியோவாக எடுத்த தேர்தல் பார்வையாளர்கள், அந்த ஆதாரத்துடன்  ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜு உள்பட அவரது ஆதரவாளர்கள் 15 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.