பாகுர், ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முத்தப் போட்டி நடத்திய இரு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய பாஜக கோரி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரிடையே விவாகரத்து தற்போது அதிகரித்து வருகிறது.   இதையொட்டி அதைக் குறைத்து தம்பதிகளிடையே ஒற்றுமையை உண்டாக்க அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சைமன் மரண்டி மற்றும் ஸ்டீபன் மரண்டி ஆகியோர் விழா ஒன்றை நடத்தினர்.    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த இவ்விருவரும் அந்த விழாவை ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் என்னும் இடத்தில் நடத்தினர்.

இந்த விழாவில் தம்பதியர்களுக்கு முத்தமிடும் போட்டி நடைபெற்றது.  இதில் பல தம்பதிகள் கலந்துக் கொண்டனர்.   இவர்கள் சந்தால் என்னும் பழங்குடியை சேர்ந்தவர்கள்.  இவர்கள் கலந்துக் கொண்ட இந்த போட்டி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வைரலாகியது.   மேலும் இது போன்ற போட்டிகளால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும் எனவும் இதனால் விவாகரத்துக்கள் குறையும் எனவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த இந்த இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் உரை நிகழ்த்தியதும் மாநிலம் எங்கும் பரவியது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ஜார்க்கண்ட் பகுதி பாஜக துணைத்தலைவர் ஹேம்லால் முர்மு, “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சைமன் மரண்டி மற்றும் ஸ்டீபன் மரண்டி ஆகிய இருவரும் சந்தால் இன மக்களின் கலாச்சாரத்தை களங்கப் படுத்தி விட்டனர்.   முத்தப் போட்டி பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும்.   இந்த இனத்தில் வெளியிடங்களில் ஆணும் பெண்ணும் கைகுலுக்கிக் கொள்வது கூடக் கிடையாது.    ஆனால் அவர்களை அனைவர் மத்தியிலும் முத்தமிட வைத்துள்ளனர்.  இதற்காக இவர்கள் இருவரும் அந்த இனத் தலைவரிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.    சபாநாயகர் இவர்கள் இருவரையும் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.   இவர்கள் வரும் குளிர்காலத்தொடர்களில் கலந்துக் கொள்ள தடை விதிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.