டில்லி:
நாடு முழுவதும் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் சுமார் 6 லட்சம் வழக்குகள் வரை நிலுவையில் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுடன் மும்பை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது.
நிலுவை வழக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் எண்ணிக்கையை குறைத்தல் தொடர்பாக ஒரு கண்காணிப்பக அமைப்பு புள்ளி விபரங்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண் டுகளாக பல உயர்நீதிமன்றங்களில் 6 லட்சம் வழக்குகள் வரை நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு நிலுவை வைத்து மும்பை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. 2016ம்ஆண்டு இறுதி வரை 24 உயர்நீதிமன்றங்களில் 40.15 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதில் 19.45 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த 7ம் தேதி வரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 650 வழக்குகள் 20 உயர்நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளு க்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது என்று தேசிய நீதித்துறை புள்ளி விபர அமைப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளது. இதில் அலகாபாத் உயர்நீதிமன்ற நிலுவை தகவல்கள் கிடை க்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 63 வழக்குகள் நிலுவை உள்ளது. இதில் சிவில் வழக்குகள் 96 ஆயிரத்து 596, கிரிமினல் வழக்குகள் 12 ஆயிரத்து 846 ஆகும். ரிட் மனுக்கள் 19 ஆயிரத்து 621 நிலுவை உள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக 99 ஆயிரத்து 625 வழக்குகளை நிலுவை வைத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் சிவில் வழக்குகள் 64 ஆயிரத்து 967, கிரிமினல் வழக்குகள் 13 ஆயிரத்து 324 ஆகும். ரிட் மனுக்கள் 21 ஆயிரத்து 334 நிலுவை உள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 74 ஆயிரத்து 315 வழக்குகள் நிலுவை உள்ளது. இதில் சிவில் வழக்குகள் 40 ஆயிரத்து 529, கிரிமினல் வழக்குகள் 14 ஆயிரத்து 898, ரிட் மனுக்கள் ஆயிரத்து 888 நிலுவையில் உள்ளது.
2014ம் ஆண்டு இறுதியில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 41.52 லட்சமாகும். 2015ம் ஆண்டு டிசம்பரில் இது 38.70 லட்சமாக குறைந்தது. ஆனால், 2016ம் ஆண்டு இறுதியில் இது 40.15 லட்சமாக உயர்ந்துவிட்டது. எனினும் 2014ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவு தான்.