டில்லி,
தலைநகர் டில்லியில் உள்ள பிரபல மேக்ஸ் மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்த குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை செய்ய டில்லி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட அந்த மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் டில்லியில் ஷாலிமர் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில், பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கும் போதே இறந்ததாகக் கூறி பார்சல் செய்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.
ஆனால், அந்த குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டில்லியில் உள்ள சாந்திதேவி என்னும் இளம்பெண் பிரசவத்துக்காக டில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்த குழந்தையின் எடை 400 கிராம் இருந்ததாம்.
ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவித்தனர். குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு பிளாச்டிக் பையில் பார்சல் செய்துக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய பார்சலில் இருந்து வெளியே எடுத்த போது, குழந்தை கை கால்களை ஆட்டிக் கொண்டும், அழுதுகொண்டும் உயிருடன் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக குழந்தையை அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரண மாக இந்த நிகழ்வு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட மருத்துவரி டம் விசாரணை நடத்தவும் டில்லி அரசு உத்தரவிட்டது.
அதன்படி, டில்லியில் ஆட்சி செய்துவரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு மருத்துவமனை நிர்வாகம் செயல்பட தடை விதித்துள்ளது. மருத்துவமைனையின் லைசென்சை கேன்சல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இது சாதாரண தவறு கிடையாது. வழக்கமான இதுபோன்ற தவறுகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.