சென்னை:
ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் டி.டி.வி. தினகரன்,கோரிய தொப்பிச்சின்னம் அவருக்கு கிடைக்காது எந்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி அவரது சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் விதிமுறைப்படி சுயேச்சை வேட்பாளர்களில் யாருக்கு, என்ன சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதியின் தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்ய முடியும். இந்த பிரச்சினையில் கோர்ட்டு உத்தரவிட முடியாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட இரு கட்சிகள் தொப்பி சின்னத்தைக் கோரியிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்பதால் அந்த கட்சிகளின் கோரிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.