டில்லி,
வரும் 6ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள், ரெயில்வே நிலையங்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1992 அன்று கரசேவகர்களால், இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை ராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இடித்து அழிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என கருதி, மத்திய மாநில அரசுகள் பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி வரும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள், ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முக்கிய முருகன் கோவிலான பழனி மலைக்கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.