டில்லி,

2ஜி முறைகேடு வழக்கில் வரும் 21ந்தேதி காலை 10.30 மணி அளவில்  தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

இன்று தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் நீதிபதி அறிவித்த நிலையில், இன்று  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்  நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தனர். திமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கை முதன்முதலில் தொடர்ந்து பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

வரும் 21ந்தேதி தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  2 ஜி அலைக்கற்றை  ஊழல் குறித்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதமே  முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த விசாரணையின்போது, நவம்பர் 7ந்தேதி  தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைமயிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது, கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது,  2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன் காரணமாக  ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றது என  சிபிஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ராஜா,  கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் வழக்குகளை  நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ, கடந்த 2011ம் ஆண்டு தாக்கல் செய்தது. அதையடுத்து நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிப்பது குறித்து பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த முறை விசாணையின்போது,   நீதிபதி ஓ.பி. சைனி, இந்த வழக்கில் மேலும் முக்கிய ஆவனங்கள் சேர்க்க வேண்டியதிருப்பதால், தீர்ப்பு வெளியாகும் தேதி குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5ந்தேதி அறிவிக்கப்படும் என்றும், தீர்ப்பு தயாராக 3 வார கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறி இருந்தார்.

அதன்படி இன்று காலை சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த தீர்ப்பை நாடு முழுவதும் பொதுமக்கள் உள்பட திமுகவினரும் பெரிதும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே திமுகவை சேர்ந்த முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் சிறை சென்று, தற்போது ஜாமினில் இருந்து வருகின்றனர். இந்த தீர்ப்பில் அவர்கள்மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர்கள் மீண்டும் சிறைசெல்ல நேரிடும். அவர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாகவில்லை என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.