சாம்பரன்:

இஸ்லாமிய பெண்ணையும், அவரை காதலித்த இந்து வாலிபரையும் பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த கொடூரம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சாம்பரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்ஜகான் காதுன். 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் உடன் பயின்ற முகேஷ்குமார் என்ற மாணவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு நூர்ஜகான் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முகேஷ்குமார் தந்தைக்கு கடந்த 27ம் தேதி மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார். உங்களது மகன் உடல் கரும்பு தோப்பில் கிடப்பதாக தெரிவித்தள்ளார். இதையடுத்து உறவினர் ஒருவருடன் தந்தை அங்கு சென்று சென்று பார்த்தார். அங்கு ஒரு மாணவரும், மாணவியும் தரையில் கிடந்தனர். அதில் மாணவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இருவரையும் சுற்றி 7 பேர் நின்று கொண்டிருந்தனர்.

தந்தை, உறவினரை வயல் பகுதிக்குள் செல்ல அந்த மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களால் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தரையில் கிடந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் காலை அவர்கள் சென்று பார்த்தபோது இரு உடல்களும் அங்கு இல்லை. இது குறித்து முகேஷ் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு பகுதிகளில் இருந்து இரு உடல்களையும் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக மாணவியின் மூத்த சகோதரர் அலாவுதீன் அன்சாரி, உறவினர்கள் குல்சானோவர், அன்சாரி மியான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூத்த சகோதரி ஷப்னம் காதூன் தலைமறைவாகிவிட்டார்.

விசாரணையில், இருவரையும் உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை அலாவுதீன் ஒப்புக் கொண்டார். இந்து மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததற்காக இஸ்லாமிய பெண்ணை அவரது கு டும்பத்தினரே கொலை செய்வது இது முதன்முறையல்ல.

கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடகாவில் இந்து வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இஸ்லாமிய பெண் கர்ப்பமாக இருந்தபோது குடும்பத்தினரால் எரித்து கொலை செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு நவம்பரில் உ.பி. மாநிலத்தில் இந்து கணவரும், அவரது இஸ்லாமிய மனைவியும் கு டும்பத்தினரால் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டனர். 2015ம் ஆண்டில் பீகாரில் இஸ்லாமிய பெண்ணை மணந்த இந்து வாலிபர் கொல்லப்பட்டார். இது போன்ற கொடூர சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.