காந்திநகர்,

ந்து அல்லாதவர் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பாஜகவினர் எழுப்பிய சர்ச்சைக்கு சோம்நாத் கோவில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்தி அங்குள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார். இது குஜராத் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அவர் செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக பயந்துபோன பாஜகவினர் ராகுல்காந்தி குறித்து பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர். ஏற்கனவே அவர் கிறிஸ்தவர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக பிரமுகர்கள் தற்போது, அவர் சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டதையும் சர்ச்சையாக்கி  உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு  சென்ற ராகுல் காந்தி, இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதை குறிக்கும் விதத்தில் ஒரு புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி, இந்துத்துவா ஆதரவாளர்களால் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

இது பொய் பிரசாரம் எனவும், பாஜக தோல்வி பயத்தில் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக  காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது சோம்நாத் கோவில் நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  இந்து அல்லாதோர் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை என்றும், பார்வையாளர்கள் பதிவேட்டில்தான் அவர் கையெழுத்திட்டார் என்றும் கோவில் நிர்வாகி லாஹரி கூறியுள்ளார்.

மேலும், இதுஒரு உற்சாகமூட்டும் இடம் என்று பதிவேட்டில் ராகுல் காந்தி எழுதினார் என்றும், அப்பொழுது தங்கள் பொது மேலாளர் உடன் இருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.