நாகர்கோயில்
பின்புறமாக வந்த ஒரு ரெயிலின் கடைசிப் பெட்டி ரெயில் நிலையக் கட்டிடத்துக்குள் புகுந்து கட்டிடத்தை இடித்துத் தள்ளியது.
நாகர்கோயிலில் இருந்த் நேற்று இரவு 7 மணிக்கு கிளம்ப வேண்டிய ரெயிலை ஒரு எஞ்சின் தள்ளியபடி ஷண்டிங் பகுதிக்கு எடுத்துச் சென்றது. அப்போது எஞ்சின் ஓட்டுனர் கவனக்குறைவாக வேகமாக ரெயிலை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடைய கவனக்குறைவால் எஞ்சினில் இருந்து கடைசியாக இருந்த ரெயில் பெட்டி தடம் புரண்டு சில அடிகள் ஓடி நின்றுள்ளது.
மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலின் கடைசிப் பெட்டி விரைவாகச் சென்று அங்கு பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் தகரக் கொட்டகை, மற்றும் அங்கு நிறுத்தப் பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மேல் ஏறி அந்த நிறுத்துமிடம் முடிந்ததும் உள்ள நிலையக் கட்டிடத்தில் மோதி நின்றுள்ளது. இதனால் அந்த வாகனங்கள் நிறுத்துமிடமும் ரெயில் நிலையத்தின் ஒரு பக்கச் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் பல பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல சம்பவங்கள் ஏற்கனவே சென்னை எழும்பூரிலும் அரக்கோணத்திலும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவங்களிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.