சென்னை,

நேற்று இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதும்  உடனே  தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதா என என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது பல சந்தேகங்களை கிளப்புகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியும் அறிவித்து உள்ளது.

இது எதிர்க்கட்சிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யான கனிமொழி,

நேற்றுத்தான் இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இன்று காலையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் மாதம் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இவ்வாறு சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே தேர்தல் தேதியை அறிவித்திருப்பது பல சந்தேகங் களை எழுப்புகிறது என்று கூறினார்.

மேலும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் வெற்றி முடிவு குறித்து கூற வேண்டும் என்றால், தற்போது தமிழகத்தை ஆளும் அரசாங்கத்தை முற்றிலும் நிராகரிக்கக் கூடிய மனநிலையிலேயே மக்கள் உள்ளனர்.  எனவே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆர்.கே.நகரில் ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேஷ்-க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து,  கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்தாலோசனை செய்து முடிவு செய்வார்கள்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.