திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.
இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீபிடாரியம்மன் உற்சவ மும், ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றது.
தீபத்திருவிழா கொடியேற்றம் இன்று காலை கொடியேற்றத் துடன் தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தங்கக் கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி யேற்றப்பட்டபோது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
பின்னர் தங்க கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. டிசம்பர் 2ம் தேதி கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வான தீப திருவிழா கொண்டாடப்படும். விழா தொடங்கியதையடுத்து, அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பிரசித்தி பெற்ற விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.
இதற்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.