ஸ்ரீநகர்:

பால் பற்றாகுறையை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பால் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்துகிறது.

கால்நடை பராமரிப்பு துறையின் இந்த திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தில் தேர்வு செய்யப்படும் 50 பயனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்துடன் நவீன பால் பண்ணை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடை துறை அமைச்சர் கோஹ்லி கூறுகையில், ‘‘மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பால் கிராமம் ஏற்படுத்த ஆக்கப்பூர்வ திட்டத்தை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு போதுமான நிதி ஆதாரம் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

ஆர்ஜி கிராமத்தில் முதல் பால் கிராம திட்டத்தை தொடங்கி வைத்த கோஹலி மேலும் கூறுகையில், ‘‘பால் விற்பனை மற்றும் விநியோகத்துக்கு இடையிலே ஏற்பட்டுள்ள இடைவெளியை தீர்க்கும் வகையில் பால் கிராமம் திட்டம் கொண்டு வரப்ப்டடுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் ராஜவுரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநில பால் உற்பத்தியில் ஈடுபடும் குஜ்ஜார் சமுதாயத்தினர் அதிகம் பயனடைவார்கள்.

மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகிறது. மாநில அரசும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், கீழ் தட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. பால் கிராமம் அமைக்கும் திட்டம் என்பது மலை வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.