“ஹரஹர மகாதேவகி.. என்று இந்துக்களின் புனித மந்திரத்தை படத்துக்கு தலைப்பாக வைத்தும் ஆபாச காட்சிகளுக்கு பின்னணியாக ஒலிக்கவைத்தும் இந்துக்களை இழிவுபடுத்துகிறார் இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர் தன்னைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனத்தின் அதிபார் ஞானவேல்ராஜா. இவர் தனது நிறுவனத்தின் மூலம், “ஹரஹரமகாதேவகி” என்ற தலைப்பில் திரைப்படம் எடுத்து வெளியிட்டார். “இந்து மத மந்திரங்களை படத்தின் தலைப்பாக வைத்திருப்பதோடு, ஆபாச காட்சிகளுக்கு பின்னணியாக இந்த மந்திரச் சொற்கள் ஒலிக்கவிடப்படுகின்றன” என்று இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக, “ ஒரு பஜனையின் ஆரம்பம், இருட்டு அறைியல் முரட்டுக்குத்து, பல்லுபடாம பார்த்துக்கோ” ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் தலைப்புகளும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாவது:
“ஞானவேல் ராஜா, “ஹரஹர மகாதேவகி” என்ற தலைப்பில் படம் எடுத்தபோதே இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்தோம். ஆபாச படமான அந்தப் படத்துக்கு, இந்து மக்கள் மதித்து உச்சரிக்கும் மந்திரங்களை தலைப்பாக வைத்தது கண்டனத்துக்குரியது.
ஆனால் தொடர்ந்து அதே போல படம் எடுக்க முனைகிறார் ஞானவேல்ராஜா. அடுத்ததாக , “ஒரு பஜனையின் ஆரம்பம்” என்று படம் எடுக்கிறாராம்.
பஜனை பாடல்கள் என்பது இந்து மதக் கடவுள்களை போற்றி வணங்கி பாடுவதற்குக் குறிப்பிடும் சொல். அதையும் கேவலமாக்கி படம் எடுக்கிறார் ஞானவேல்ராஜா.
இவரைப் பற்றி விசாரிக்கும் போது, அவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரியவருகிறது. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இவரது தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். தந்தை இஸ்லாமியர். சிறு வயதில் இவருக்கு ஞானவேல்ராஜா என்று பெயர் வைத்திருந்தாலும் பின்னாட்களில் இஸ்லாமியராகவே வளர்க்கப்பட்டிருக்கிறார். இவர் திருமணம் செய்ததும் இஸ்லாமிய பெண்ணைத்தான். இவரது குழந்தைகளும் இஸ்லாமியராக வளர்க்கப்படுகிறார்கள்.
இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவரவர் மதம் அவரவர்களுக்கு. ஆனால் ஒரு மதத்தில் பற்றுடன் இருப்பதாலேயே அடுத்த மதத்தை அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது.
இஸ்லாமியரான ஞானவேல்ராஜா வேண்டுமென்றே இந்து மதத்தை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறார்.
இதே திரைத்துறையில் ராஜ்கிரண், ஜெயம்ரவி, ஆர்யா போன்ற இஸ்லாமியர்கள் புனைப்பெயர்களுடன் இயங்கி வருகிறார்கள். அவர்களது படத்தில் எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவது போல நடித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் சில படங்களில் இந்துமத மந்திரங்கள், பண்டிகைகளை சிறப்பிப்பது போல நடித்திருக்கிறார்கள். ஆகவே அவர்களைப் போன்றவர்களை நாங்கள் விமர்சிக்கவில்லை.
ஆனால் இஸ்லாமியரான இந்த ஞானவேல்ராஜா, வேண்டுமென்றே இந்துமதத்தை இழிவுபடுத்தும்படியாக படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இவரது படங்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது என்பது மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கிறது. இவர் தயாரிக்கும் இன்னொரு படத்தின் பெயர், “பல்லுபடாம பார்த்துக்கோ” என்பதாகும். இன்னொரு படம்.. “இருட்டு அறையில் முரட்டுக்குத்து”.
இவர் தனது மனைவி, குழந்தைகளிடம், “இருட்டு அறைியல் முரட்டுக்குத்து, பல்லுபடாம பார்த்துக்கோ என்ற பெயர்களில் படம் எடுக்கிறேன்” என்று வெட்கத்தை விட்டுச் சொல்வாரா? இந்த அளவுக்கு கேவலமான தலைப்புகளை வைத்து, ஆபாசமாக படம் எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா?
ஞானவேல்ராஜா, தான் தயாரித்து வெளியிட்ட, “ஹரஹர மகாதேவகி..” என்ற படத்தை இனி எங்கும் திரையிடக்கூடாது. தயாரிப்பில் இருக்கும், “ஒரு பஜனையின் ஆரம்பம், பல்லுபடாம பார்த்துக்கோ” ஆகிய படங்களின் தலைப்பை மாற்ற வேண்டும். அவற்றில் சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆபாச காட்சிகள் இருக்கக்கூடாது.
இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை ஞானவேல்ராஜா எதிர்கொள்ள வேண்டும். அதாவது, இந்தப் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவோம். தவிர அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளிப்போம்.
இதற்கெல்லாம் முன்பாக.. இப்போதே தனது செயலுக்கு ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்பதோடு, அடுத்து வரும் படத்தின் தலைப்புகளை மாற்றுவதாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்” என்று ஆவேசமாக நம்மிடம் தெரிவித்தார் அர்ஜூன் சம்பத்.
இது தொடர்பாக ஞானவேல் ராஜாவின் கருத்தை அறிய அவரது எண்ணில் தொடர்புகொண்டோம். அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது. ஆகவே இது குறித்த செய்தியை ஞானவேல்ராஜாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புகிறோம். அவரது விளக்கத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.