சபரிமலை
சபரிமலையில் தற்போது ஒலிக்கப்படும் ஏசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலில் சில குறைகள் உள்ளதால் வேறு ஒரு புதிய பாடல் ஒலிபரப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கர்னாடக இசையிலும் திரை இசையிலும் மிகவும் புகழ்பெற்ற பாடகர் ஏசுதாஸ். ஏசுதாஸ் பாடிய பல ஐயப்பன் பாடல்களில் ஹரிவராசனம் என்னும் பாடலும் ஒன்றாகும். இந்தப் பாடல் சபரிமலைக் கோயிலில் சாமிக்கு தாலாட்டுப் பாடலாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் 1920ஆம் ஆண்டு எழுதப்பட்டு அதன் பின் பலராலும் பாடப்பட்டிருந்தாலும் ஜேசுதாஸ் பாடிய பின்னரே பெரும் புகழ் அடைந்தது. இந்தப் பாடல் ஒரு திரைப்படத்துக்காக பாடப்பட்ட பாடல் ஆகும்.
இந்த திரைப்பாடலில் ராகத்துக்கு ஏற்றவாறு சில சொற்களை பாடி உள்ளதாகவும் அது தவறானது எனவும் தற்போது கூறப்படுகிறது. உதாரணமாக ’அரிவிமர்தனம்’ என வரும் வரியில் ’அரி’ தனி வார்த்தை எனவும் ’விமர்தனம்’ தனி வார்த்தை எனவும் இரண்டையும் தனித்தனியே தான் உச்சரிக்க வேண்டும் எனவும் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை ஏசுதாஸும் ஒப்புக் கொண்டுள்ளார். பாடலின் ராகம், சுரம், தாளம் இவைகளுக்காக சேர்ந்து உச்சரிக்கப்பட்டதாக அவர் கூறி உள்ளார்.
தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவராகியுள்ள பத்மகுமார் இதற்கு பதிலாக இதே பாடலை வரிகள் மாறாமல் பதிய வைத்து உபயோகிக்க திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹரிவராசனம் பாடலை இயற்றிய ஜானகி அம்மாவின் வம்சத்தை சேர்ந்தவர் பத்மகுமார்.