டில்லி.
பத்மாவதி திரைப்படத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல் இருந்த பாஜக தலைவர்கள் தற்போது அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இந்தித் திரைப்படமான பத்மாவதிக்கு நாடெங்கும் இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராஜஸ்தான் கர்ணி சேனா அமைப்பினர் அதில் நடித்த தீபிகா படுகோனேவுக்கும், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லாத பா ஜ க தலைவர்கள் இப்போது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதலில் வாய் திறந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மானத்தை காக்க உயிரை விட்ட அரசி பத்மாவதியின் கதையை மாற்றி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் படத்தயாரிப்பாளர்கள் நமது சரித்திரத்தையும் பாரம்பரியத்தையும் மனதில் கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றும் பத்மினி நமது சரித்திரத்தில் மாபெரும் இடம் பெற்றவர் என்பதால் அவருடைய மரியாதைக்கு பங்கம் வரும் வகையில் படம் எடுப்பது தவறு எனவும் கூறி உள்ளார்.
அலாவுதின் கில்ஜியால் சித்தூர் தோற்கடிக்கப்பட்ட பின் தனது உயிரை மாய்த்துக்கொண்ட பத்மினி யின் ஜுவாலை என்றும் எங்கள் பெண்டிரை காக்கும் என கருத்துக் கொண்ட அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதையை சுட்டிக் காட்டி பா ஜ க வின் தலைவர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பத்மினியின் கதாபாத்திரம் மட்டமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கும் அலாவுதின் கில்ஜிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குஜராத் மாநில பா ஜ க இந்தப் படத்தை இப்போது குஜராத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கூறி உள்ளது. ராஜபுத்திரர்களின் கடுமையாக எதிர்க்கும் இந்த திரைப்படம் இந்த தேர்தல் சமாஹ்ட்தில் வெளிவந்தால் அது கடும் விளைவை உண்டாக்கும் என எச்சரித்துள்ளது. குஜராத் மாநில பா ஜ க செய்தி தொடர்பாளர் ஜடேஜா, “பத்மாவதியும் கில்ஜியும் ஒரு முறை கூட சந்தித்ததாக சரித்திர தகவல்கள் இல்லை. எனவே இந்தத் திரைப்படத்தினால் தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் நேரிடலாம். அதை தவிர்க்க ராஜபுத்திரர்களின் பிரதிநிதிகளுக்கு இந்த படத்தை திரையிட்டுக் காட்ட தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.