நாடு ஒளிர்கிறதோ இல்லையோ, மோடி ஒளிர்கிறார் என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

புகழ்பெற்ற அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம்  ( Pew Research Center) மோடியின் செல்வாக்கு இன்னமும் அபரிமிதமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு. மக்கு பப்புவாக சித்தரிக்கப்பட்டவரின் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் பாஜகவினர் திணறுகின்றனர். காங்கிரசிற்கு புத்துயிர் கிடைத்திருக்கிறது,  என்றெல்லாம் சிலர் பரபரப்பாகப் பேசி வந்தாலும், நடிகர் விவேக் மொழியில், ”மோடியை அடிச்சிக்க ஆளில்லை.”

இந்த ஆண்டு . பிப்ரவரி 21க்கும் மார்ச் 10க்கும் இடையில், 2464 நபர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம், இந்தியாவில் பத்துக்கு ஒன்பது பேர் மோடியின் தலைமைக்கு ஆதரவாகவே இருக்கின்றனர் என்று பியூ கூறுகிறது.

இந்தியர்களில் 88 சதமானோர் மோடியை ஆதரிக்கின்றனர், ராகுலுக்கான ஆதரவு வெறும் 58 சதம்தான், ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவாலுக்கோ 39 சதமே.

என்ன,  மதப் பூசல்கள் பிரச்சினையில் மோடி போதிய அக்கறை காட்டவில்லை என்கின்றனர் கணிப்பில் பங்கேற்றோர். மற்றபடி 85 சதமானோர் அரசின் மீது தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்திருக்கின்றனர்.

கருத்துக் கணிப்பு என்பது அறிவியல் பூர்வமான தகவல் திரட்டல். ஆண், பெண், முதியவர், இளைஞர், ஏழை, பணக்காரர், கிராமப் புறம், நகர்ப்புறம், சாதி, மதம் என அனைத்து தள மன நிலைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில்தான் யாரைத் தொடர்புகொள்வதென முடிவு செய்வார்கள்.

இத்தகைய ஆய்வு முறை அமெரிக்காவில் நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் என்றல்ல, மற்ற பல விஷயங்களைப் பற்றியும் அங்கே தொடர்ந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

தேர்தல்களைப் பொறுத்தவரை தவறுகள் நடப்பதும் உண்டு. கடந்த ஆண்டு ஹிலரி கிளிண்டனே வெல்வார் என்றுதான் எல்லா ஆய்வுகளும் கூறின. ஆனால் முடிவு அனைவர்க்குமே பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன் அப்படி நடந்தது என இன்னமும் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர் வல்லுநர்கள். ஆனாலும் கணிப்புக்களின் வழியான முடிவுகள் சரியாகவே இருக்கும் என்பது பொதுவான புரிதல்.

அதே நேரம் இந்தியாவில் சிக்கல்கள், வேறுபாடுகள் எண்ணிலடங்கா, கல்வியறிவற்றர்களே ஏராளம். இந்நிலையில் எந்த அளவு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முன்வருவார்கள், ஆட்சியாளர்களுக்கு பயந்து பொய் சொல்லியிருக்கலாமல்லவா என்றும் கேட்கலாம்.

மேலும் குஜராத் தேர்தல்களை மனதில் கொண்டு பியூவிடம் கணிப்பு நடத்தச் சொல்லி கேட்டிருக்கலாம். சாதகமான முடிவுகள் வரும் அல்லது வரவைக்கப்படும், அவை வெளியாகும்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கும், அந்த நேரத்தில் கணிப்புக்கள் பாஜகவிற்கு பேருதவியாயிருக்கும் என்பதாலேயே பியூவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் நினைக்கின்றனர்.இதிலெல்லாம் எந்த அளவு உண்மை என்பதை அறுதியிட்டுக்கூறவியலாது.

தொலைபேசி வழியாகவும் நேரடியாகவும் கேள்விகள் கேட்டு, கிடைக்கும் விடைகளை வைத்தே இந்த கணிப்புக்கள். இந்திய மக்கட் தொகை 132 கோடிக்கும் மேல், வாக்காளர்கள் 81 கோடிக்கும் மேல். அந்த நிலையில் வெறும் இரண்டாயிரம் பேருடனான தொலைபேசி உரையாடல்களை வைத்து ஒட்டு மொத்த உபகண்டம் இப்படித்தான் நினைக்கிறது என துல்லியமாகக் கணித்துவிடமுடியுமா என்று கேள்வி எழுவதும் இயல்பு.

மேலும் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்று அறிவித்தது, பின்னர் ஜி எஸ் டி, இரண்டுமே பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது, மக்களின் அவதி விவரிக்க இயலாதது என்று பலர் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி வரும் இந்நேரத்தில், பொருளாதாரம் நன்கு மேம்பட்டிருப்பதாக பத்துக்கு எட்டு பேர் தெரிவித்தனர் என்கிறது பியூ கணிப்பு. இம்முடிவும் கேள்விக்குரியதே.

ஆனால் எதிர்க் கட்சியினருக்கு சற்றே ஆறுதலளிக்கக்கூடிய ஓர் அம்சமும் இருக்கிறது. காங்கிரசிற்கு கிராமப்புறங்களில் ஆதரவு அதிகமிருப்பதாகக் கூறுகிறது ஆய்வு.

குஜராத் மாநிலத்தில் நகர்ப்புறமயமான பகுதிகள் அதிகம் அதனாலேயே அங்கே பாஜக வெல்லக்கூடிய வாய்ப்பு. மேலும் ராகுலுக்குக் கூட்டம் திரண்டாலும், அங்கே மோடியின் செல்வாக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது, அதைவைத்துக்கொண்டே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்பது பல நோக்கர்களின் ஆருடம்.

அந்த குஜராத்திலேயே பல்வேறு காரணங்களினால் பாஜக தோல்வியுற்றால், இந்த பிரம்மாண்ட இந்திய கிராமத்தில், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும்  அக் கட்சி மண்ணைக் கவ்வக்கூடும் என முற்போக்கு சிந்தனையாளர்கள் நம்பலாம்.

ஆனால் இன்றைய நிலையில் மக்கள் மதச்சார்பற்ற அமைப்பினரின் தவறுகள், குற்றங்களை மன்னிப்ப தாயில்லை, இன்னமும் நரேந்திர மோடியே மீட்பராகத் தெரிகிறார் எனும் கசப்பான உண்மையினை பியூ உறுதி செய்திருக்கிறது.