சென்னை
தன்னார்வ தொண்டு நிறுவனமான தாகம் ஃபவுண்டேஷன் பெண்களுக்கு நேர்ப்படும் கொடுமைகள் பற்றி 24 மணி நேர ஆன்லைன் லைவ் ஷோ நடத்த உள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பகல் 12 மணி முதல் 8ஆம் தேதி பகல் 12 மணி வரை தாகம் ஃபவுண்டேஷன் நடத்த உள்ள ஆன்லைன் லைவ் ஷோவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், கொடுமைகள் ஆகியவை பற்றி விவாதிக்க உள்ளது. இந்த நிகழ்வில், பாலியல் தொழிலாளிகள், ஆசிட் வீச்சால் பாதிக்கப் பட்டோர், திரையுலக பிரபலங்கள், கொடுமைப் படுத்தப் பட்ட பெண்கள், ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
“மனிதி வெளியே வா” என்னும் பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதற்கட்டமாக மவுனத்தை உடைப்போம் என்னும் தலைப்பில் விவாதங்கள் நடைபெறுகின்றன. தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெண்கள் வெளியில் சொல்வதன் மூலம் தான் தீர்வு ஏற்படும் என்பதால் அனைத்துப் பெண்களும் கொடுமை நடக்கும் போது மவுனமாக செல்வது தவறு என்பது குறித்துப் பலர் விவாதிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று உங்களுள் இருக்கும் மனிதியை வெளிக்கொணருதல், மற்றது கொடுமைகளை வெளியே சொல்வது. இதில் பொதுமக்கள் தொலைபேசி மூலம் கலந்துக் கொண்டு தங்களின் ஆதர்ச பெண்மணிகளைப் பற்றி கூறலாம். அதே போல அவர்களுடைய பிரச்னைகளையும் கூறலாம். இந்த நிகழ்வு பற்றிய விவரங்கள் பிரசுரிக்கப் பட உள்ளதால் கலந்துக் கொள்பவர்களின் அனுபவம் பல பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அறிவித்துள்ள தாகம் ஃபவுண்டேஷன் இது பற்றிய மேலும் தகவல்கள், மற்றும் விசாரணைக்கு 8870262513 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.