நாகை,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்ட மீனவர்கள் மேலும் 10பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நேற்று 10பேரை கைது செய்துள்ள நிலையில், இன்றும் 10பேரை கைது செய்திருப்பது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது இந்திய கடற்படையினரின் தூண்டுதலின் பேரில் நடைபெறுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கையை ஒட்டிய பருத்திதுறை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தும், அவர்களின் விசைப்படகையும் கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றும் இதுபோல எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்தது.
தொடர்ந்து இலங்கை கடற்படை இதுபோன்ற அந்துமீறி செயல்படுவதற்கு இந்திய கடற்படையினரே காரணம் என்று மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்மீது இந்திய கடற்படையினர் இந்தியா பேச வலியுறுத்தியும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பின்னர் இந்திய கடற்படை மன்னிப்பு கோரியது.
அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய கடற்படையினரின் தூண்டுதலே காரணம் என்றும், இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தாலும் அத்துமீறி இலங்கை கடற்படையினர் செயல்படுவதை, இந்திய கடற்படை கண்டிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதுவரை இலங்கை சிறையில் 109 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.