லக்னோ:

உ.பி மாநிலம் நொய்டாவில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள திக்ரி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவ் குமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் அக்கிராமத்தின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை அவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை ஒரு பைக்கில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பைக்கில் வந்த அந்த நபர்கள் துப்பாக்கியை பயன்படுத்தி சிவ் குமாரை நோக்கி சுட்டுள்ளனர். இதில் தலையில் குண்டு பாய்ந்த சிவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவருடன் இருந்த இரண்டு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிவ் குமாரின் பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.