மும்பை

ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி, தன் கணவரே ஷீனாவை கொன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை பொறுப்பை வகித்து வந்தவர் பீட்டர் முகர்ஜி.   இவரது இரண்டாவது மனைவி இந்திராணி முகர்ஜி ஆவார்.  இந்திராணிக்கு அவருடைய முன்னாள் கணவர் மூலம் பிறந்த ஷீனா போராவை கொலை செய்ததாக இந்திராணி கைது செய்யப்பட்டார்.   இந்தக் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இது தவிர இந்திராணி ஏற்கனவே இரு முறை திருமணம் ஆனவர் என்பதையும் அவருடைய முன்னாள் கணவர்கள் மூலம் அவருக்கு பிறந்த 3 குழந்தைகள் பற்றியும் பீட்டர் முகர்ஜியிடம் மறைத்து இந்திராணி திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவி மூலம் பிறந்த ராகுலை இந்திராணியின் மகள் ஷீனா போரா காதலித்ததால் இந்திராணி அவரைக் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.   இந்த வழக்கில் பீட்டரின் முன்னாள் கார் ஓட்டுனர் சியாம்வர் என்பவர் அப்ரூவராக மாறி உள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தான் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டார்.   நாடெங்கும் பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி நேற்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.   அதில், ”ஷீனா போராவின் கொலையில் எனது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு சம்மந்தம் உள்ளது.  அவரும் சியாம்வர் இருவருமாக சேர்ந்து என் மகளைக் கொன்று விட்டு ஆதாரங்களை அழித்திருக்கலாம்.   அதனால் கடந்த 2012 முதல் 2015 வரை பீட்டர் முகர்ஜியின் செல்ஃபோனுக்கு வந்துள்ள அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்யவேண்டும்.   அதன்மூலம் பல உண்மைகள் வெளிப்படும்” என கூறப்பட்டுள்ளது.