மும்பை:
நான்கு மாதங்களாக 50 அடி நீள சுரங்கம் தோண்டி வங்கியைக் கொள்ளையடித்துள்ள நிகழ்வு மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் நவி மும்பை பகுதியில் பாங்க் ஆப் பரோடா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது கடந்த திங்களன்று காலை தெரியவந்தது. அதற்கு முன்பாக சனிக்கிழமை இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையர்கள் 50 அடி நீளம் சுரங்கப்பாதை தோண்டி, வங்கிக்குள் புகுந்ததும் தெரியவந்துள்ளது. வங்கிக்கு அருகில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள், யாருக்கும் சந்தேகம் வராமல் கடந்த நான்கு மாதங்களாக இந்த சுரங்கப்பாதையை தோண்டியிருக்கின்றனர்.
வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் யூகிக்கின்றனர். ஏனெனில் குறிப்பிட்ட கடையை வாடகைக்கு எடுத்தவர்களை அதன் பிறகு காணவில்லை.
வங்கியில் உள்ள 225 பாதுகாப்பு பெட்டகங்களில், 30 பெட்டிகளில் திருட்டு நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.