சென்னை:
அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிகளை இடமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பரில் உயிரிழந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஏற்கனவே மறைந்த முதல்வர்கள்அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரது சமாதிகள் உள்ளன. தற்போது ஜெயலலிதாவின் சமாதியுடன் சேர்த்து அங்கு 3 சமாதிகள் உள்ளன. ஜெயலலிதாவின் நினைவிடத்தை ரூ.15 கோடி செலவில் கட்டுவதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கடலோர பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு தடைவிதித்தும், அப்பகுதியை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது குறித்தும் கடந்த அக்டோபர் 6ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், மெரினா கடற்கரையில் 3 பெரும் தலைவர்களின் சமாதிகள் உள்ளதால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், ‘‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடப்பதை தடுக்கும்விதமாக, அவ்வப்போது போலீசார் 144 தடை உத்தரவுகளை வேறு பிறப்பிக்கின்றனர். மேலும், எதிர்காலத்தில் வேறு சில அரசியல் தலைவர்களின் சமாதிகள் இங்கு அமைக்கப்படலாம்.
எனவே, மெரினா கடற்கரையில் இந்த 3 தலைவர்களின் சமாதிகள் இருப்பது சரியாக இருக்காது. அதனால், இந்த சமாதிகளை கிண்டியில் உள்ள காந்தி சமாதியில் உள்ள வளாகத்துக்கு மாற்ற உத்தரவிடவேண்டும். இதுகுறித்து நான் கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பரிசீலிக்க உத்தரவிடவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தலைமை செயலாளர், கவர்னரின் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.