சென்னை:

மிழகத்தில் நீட் மற்றும் மத்திய அரசின் பல்வேறு மேற்படிப்புகான  தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 100 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் கடந்த அக்டோபர் 25அன்று கையெழுத்தாயின.

அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்தின்படி  படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி  தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டு அதற்கான முயற்சி யில் இறங்கியது. இதற்காக தமிழக்ததில் இருந்து திறமையான சில ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐதராபாத் அனுப்பப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மாதம் 25ந்தேதி, பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியா நிறுவனங்களுடன்  3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் கட்டமாக 100 பயற்சி மையங்கள் தொடங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம், சேலம், திண்டுக்கல் கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கான பயிற்சி மையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மேலும் 54000 கேள்விகள் அடங்கிய கையேட்டையும் வெளியிட்டார்.

விழாவில் முதலமைச்சர் பேசும்போது, “தமிழக அரசின் பாடத்திட்டம் இந்தியாவின் எந்த மாநிலத்தின் பாடத்திட்டத்திற்கும் சளைத்தது அல்ல. போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தயக்கமின்றி எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அறிவுத் தலைநகராக சென்னையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்தம் 412 இடங்களில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஸ்பீடு அறக்கட்டளையுடன் இணைந்து இந்த பயிற்சியை தமிழக அரசு அளிக்க உள்ளது” என்றார்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.