நியூயார்க்

கை கால் வலி, சுளுக்கு போன்றவைகளுக்கு ஏற்கனவே இருக்கும் வலி நிவாரணிக்கு மாற்றாக புதிய வலி நிவாரணி மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தற்போது வலிகள் குறைய கொடுக்கப்படும் ஓபியாய்ட் கலந்த மருந்துகளால் சிலருக்கு வலிகள் உடனடியாக குறையாததுடன் பக்கவிளைவுகளும் கடுமையாக உள்ளன.  அதனால் ஒபியாய்ட் கலக்காத மருந்துகளைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது.  இந்த ஆய்வு ஆண்ட்ரூ கே சங்க் என்னும் மருத்துவர் தலைமையில் நிகழ்ந்தது.

அப்போது ஒபியாய்ட் இல்லாத மருந்துகளான டைலினால் மற்றும் அட்வில் கலந்த மருந்தை உட்கொள்வதால் வலிகள் உடனடியாக குறைவதாகவும் பின் விளைவுகள் ஏதும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   இந்த மருந்தை கை மற்றும் கால்களில் கடுமையான வலி, சுளுக்கு, அடிபட்ட காயத்தினால் வலி, ஆகியவை உடைய 416 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.  இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர்.

அவர்களுக்கு உட்கொள்ளும் மருந்தாக அசிடோமினொஃபென் (டைலினால்) மற்றும் இபுப்ரோஃபின் (அட்வில்) ஆகிய மருந்துகளை கொடுத்துள்ளனர்.  இரண்டு மணி நேரம் கழித்து அவர்களிடம் வலியின் கடுமை பற்றி சோதனை நடத்தப்பட்டது.   மருந்து உட்கொள்ளும் முன்பு 8.7 அளவில் இருந்த வலி,  இந்த மருந்துகள் உட்கொண்டபின் 4.4லிருந்து 3.5 ஆக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.  அதாவது ஓபியாய்ட் கலந்த மருந்துகளின் அளவுக்கு இந்த மருந்துகளின் செயல்பாடும் உள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான ஆண்ட்ரூ அல்பனி மெடிகல் கல்லூரியில் பேராசிரியராகவும் பணி புரிந்து வருகிறார்.   அவர் இது பற்றி தெரிவிக்கையில், “ஒபியாய்ட் அல்லாத மருந்துகள் ஆய்வில் சிறந்தவைகளாகவே உள்ளன.   பல மருத்துவர்கள் ஒபியாய்ட் கலந்த மருந்துகளை அளிக்க விரும்புவதில்லை.   அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.  ஒபியாய்டின் பக்கவிளைவுகளில் இருந்து நோயாளிகளை காக்க இந்த ஆய்வு பெரிதும் உதவும்” என தெரிவித்துள்ளார்.