மும்பை

தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவுடனான நட்பை தொடர சிவசேனா விரும்பவில்லை என கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவை ஆளும் பா ஜ க வுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிவ சேனாவுக்கும் தற்போது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.   சிவசேனாவில் இருந்து பிரிந்து பின் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நாரயண் ரானேவை பா ஜ க தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக வந்த தகவல்கள் சிவசேனாவுக்கு பெரிதும் கோபத்தை உண்டாக்கியது.   சமீபத்தில் சிவசேனாவின் தலைவர் பா ஜ க அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் ஊழல்கள் பற்றிய கையேட்டை சிவசேனா தொண்டர்களுக்கு வழங்கினார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே சந்தித்து பேசியதாக செய்திகள் வந்தன.   இந்த சந்திப்பு 10 நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பவாரின் இல்லத்தில் நடந்ததாக தெரிய வந்துள்ளது.   இந்த சந்திப்பை உறுதி செய்த சரத் பவார் சந்திப்பின் போது தாங்கள் பேசிய விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.  இது குறித்து,  “இந்த சந்திப்பின் மூலம் நான் அறிந்துக் கொண்டது.  உதவ் தாக்கரேவுக்கு தனது கட்சியான சிவசேனா பாஜகவின் நட்பைத் தொடர விருப்பம் இல்லை என்பதே ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

சரத் பவார் விரைவில் தனது கட்சிப் பிரமுகரகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பவார் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   சிவசேனா தனது கூட்டணியை பா ஜ க விடம் இருந்து முறித்துக் கொண்டால் அடுத்து தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையைப் பற்றி அப்போது அவர் விவாதிப்பார் என தெரிகிறது.

சிவசேனா இது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.