சென்னை,

டந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய பாரதியஜனதா திடீரென ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து  மதிப்பிழப்பு செய்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானர்கள். புதிய பணம் கிடைக்காமலும், பணத்தட்டுப்பாடு காரணமாகவும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட செலவுக்கே பணமில்லாமல் திண்டாடினர். இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவமும் நடைபெற்றது.

அதன் காரணமாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கும்படி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், வரும் 8-ம் தேதியன்று (நாளை மறுதினம்) மழை, வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான 8 மாவட்டங்க ளைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து வருகின்ற  நவம்பர் 8-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கழக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமான வெள்ள பாதிப்புகளின் நிவாரணப் பணிகளில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு வருகின்ற காரணத்தால், இந்த ஆர்பாட்டத்தை கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட தலைநகரங்களில் பணமதிப்பிழப்பு தினம் – “கறுப்பு தினமாக” அனுசரித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஒத்தி வைக்கப்பட்ட எட்டு மாவட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மற்ற மாவட்டங்களில் உள்ள கழக நிர்வாகிகள்  – கழகத் தோழர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பினை காட்டிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் “கருப்பு பேட்ஜ்” அணிந்து பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து,  இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டுமென மாவட்டக் கழகச் செயலாளர்களை தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.