சென்னை

சிறையில் இடம் இல்லாததால் என்னை கொல்லப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என கமலஹாசன் கூறி உள்ளார்.

கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் பேட்டி ஒன்றில் இந்துத் தீவிரவாதம் என்னும் சொல்லை உபயோகித்ததற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.   பல இந்து அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பனாரசில் இதையொட்டி கமல் மீது வழக்கு பதியப்பட்டது.    அகில பாரத இந்து மகா சபா தலைவர் பண்டிட் அசோக் சர்மா, கமலஹாசனை துப்பாக்கியில் சுட்டோ அல்லது தூக்கில் இடப்பட்டோ கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

நேற்று விவசாயிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட கமல் இது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  கமல், “நாம் யாரையாவது ஏதாவது கேள்விகள் கேட்டால் அவர்கள் நம்மை தேசத்துக்கு எதிரானவர் எனக் கூறி சிறையில் அடைத்து விடுகின்றனர்.  தற்போது இவர்கள் நடவடிக்கையால் சிறைகள் நிரம்பி உள்ளது.   அங்கு இடம் இல்லாததால் தற்போது சுட்டுக் கொல்ல உத்தேசித்துள்ளனர்.” என கூறி உள்ளார்.

பண்டிட் அசோக் சர்மா ஏற்கனவே கமலஹாசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை தனிமைப் படுத்த வேண்டும் எனவும், அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் உட்பட குடும்பத்தினர்கள் நடித்த திரைப்படங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.