கோயம்புத்தூர்

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியது.   அதற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த அரசு உத்தேசித்தது.   ஆனால் சரியான ஈட்டுத் தொகையை அரசு அளித்தாக வேண்டும் என அங்குள்ள மக்கள் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.  அதன்படி அரசு தற்போது அறிவிப்பை அளித்துள்ளது.

அதன்படி வீடுகள் உள்ள இடங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1500ம்,  விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.900ம் வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.   இது தவிர வீடுகளில் உள்ள கட்டிடங்களுக்காக சதுர அடிக்கு ரூ.1500 அதிகப்படி தொகை வழங்கப்படும்.   இந்த நிலங்கள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இடங்களான உப்பிலிப் பாளையம், சின்னியாம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் கைப்பற்றப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வரும் டிசம்பர் மாத முடிவுக்குள் நிலம் கையகப்படுத்துவது முடிவடையும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.    கடந்த 2013ஆம் ஆண்டு அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பின் முதல் முறையாக அரசால் அதிக அளவில் கையகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.   அரசு அறிவித்துள்ள ஈட்டுத் தொகை சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அரசின் வழிகாட்டு மதிப்பு இந்த இடத்துக்கு விவசாய நிலங்களுக்கு ஒரு செண்டுக்கு ரூ.35000 எனவும்,  வீட்டு நிலங்களுக்கு ரூ.65000 எனவும் உள்ளது.   சந்தையில் இதே இடங்களில், விவசாய நிலங்களுக்கு ரூ. 8 லட்சமும், வீட்டு நிலங்களுக்கு ரூ.14 லட்சமும் விலை உள்ளது.  இந்த வித்தியாசம் காரணமாக ஏற்கனவே மக்கள் நிலத்தைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   அதனால் தற்போது உடனடியாக நிலத்தைக் கைப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.