டில்லி:

ரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி யூனியன் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்குக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. முன்பு டில்லியின் துணை நிலை ஆளுனராக இருந்தவர்  நஜீப் ஜங்.

இரு தரப்புக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கில் துணை நிலை ஆளுனருடன் ஆலோசனை நடத்தாமல், முதல்வரோ, அமைச்சர்களோ எந்த முடிவையும் எடுக்க முடியாது’ என, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளில், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த கேள்வியும் எழுந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு, விசாரணை மாற்றப்பட்டது.

இந்த நிலையில் டில்லி அரசு சார்பில் வாதாட உள்ள 9 வழக்கறிஞர்களில் காங். மூத்த தலைவர் சிதம்பரமும் ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டில்லி அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், முந்தைய காங். தலைமையிலான ஐககிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிதம்பரத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருந்தாலும் கட்சி பேதமின்றி சிதம்பரம் ஆஜராக இருப்பது, ஆரோக்கியமான அரசியல்.

இதற்கு முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த போதே ப.சிதம்பரம்,  மத்திய அரசு- யூனியன் பிரதேச அரசு இடையேயான சட்ட விதிமுறைகளை நன்கு அறிந்தவர்.  ஆகவே,  அவர் இந்த வழக்கில் ஆஜராக இருக்கிறார்” என்றார்.