திருவனந்தபுரம்,

விபத்தில் காயமடைந்த நபர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் முதல் 48 மணி நேரம்,  இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் , தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி கேரள மாநிலம்  கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள்  மறுத்துவிட்டன. ஏழு மணி நேர  அலைக்கழிப்புக்குப்  பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மருத்துவர்களின் மனிதாபிமனமற்ற செயலுக்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர், கேரள மருத்துவமனைகளின் இந்த செயல் காரணமாக கேரளாவுக்கு  மிகப் பெரிய களங்கத்தை  ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

பினராயி விஜயன்

மேலும், விபத்தில் சிக்கி, சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், விபத்தில் சிக்குபவர்கள் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களின் உயிரை காக்க 48 மணி நேரம்   இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார் .

கேரள முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவரும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்ற உத்தரவை பிற மாநில அரசுகளும் பிறப்பிக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.