டில்லி:
மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வாதாடவுள்ளார்.
டில்லி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டில்லி ஆம் ஆத்மி அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விவசாரணையில் ஈடுபட்டுள்ள மாநில அரசின் வக்கீல்கள் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் இணைந்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக சிதம்பரம் வாதாடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சிதம்பரம் கூறுகையில், ‘‘அரசியல் அமைப்பில் கவர்னர் தான் தலைமை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. மாநில அரசு பல் இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியும், ஆத் ஆத்மியும் இரு துருவங்களாக செயல்பட்டன. டில்லியில் நடந்த காங்கிரஸ் ஆட்சியை ஆத்ஆத்மி கடுமையாக விமர்சித்து ஆட்சியை பிடித்தது. அதோடு சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தில் இரு கட்சிகளுக்கு இடையே புது நட்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும் இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.