சென்னை:

றப்போர் இயக்கத்தின் பொருளாளர் நக்கீரன் புகழேந்தி இன்று காலை கைது சென்னையில் அவரது வீட்டில் வைத்து காவல்துறையினரால் செய்யப்பட்டார்.

தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகிறது அறப்போர் இயக்கம். அரசு நிர்வாகங்களின் ஊழல்களையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தி வருகிறது.

2015ம் ஆண்டு டிசம்பரம் மாதம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்வி ஆராய்ச்சி வளாகத்தில் நடத்தினார். அப்போது சென்னை நகரமெங்கும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் பேனர்களை கிழித்தெறிந்து அகற்றினர். இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. அப்போது அறப்போர் இயக்கம் பற்றி தமிழகம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து அந்த இயக்கத்தினர் ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த இயக்கத்தின் பொருளாளர் நக்கீரன் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னை ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோயிலை சட்டத்துக்குப் புறம்பாக விரிவாக்கி  ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். சாலையை மறித்துக் கட்டியிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 2000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதை சட்டப்படி தடுக்கும் முயற்சியில் மக்களுடன் இணைந்து நக்கீரன் செயல்பட்டு வந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புக்கு தடை விதித்து அப்பகுதி தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து ராமாபுரத்தில் கடந்த சனிக்கிழமை  அன்று கூட்டம் போட்டோம். அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். அப்போது ஆக்கிரமிப்பு குறித்து பேசக்கூடாது என்று அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் குமார் இடையூறு விளைவித்தார்.

ஆனாலும் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், அங்கு பேசிய நக்கீரன், சாதியைக் குறிப்பிட்டு பேசியதாக குமார் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார்.

இதை அடிப்படையாக வைத்து இன்று அதிகாலை நக்கீரனை கைது செய்துள்ளது காவல்துறை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” –

இவ்வாறு அறப்போர் இயக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.