திருச்சி:
பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மை கோயிலாக ஸ்ரீரங்கம் திகழ்கிறது. பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியு ருமே அந்த திருத்தலங்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்றதாகும்.
இந்த கோயில், தொன்மைவாய்ந்த சிற்ப வடிவமைப்புகளுக்கும், வழிபாட்டுமுறைகளைகளுக்கும், விழாக்களுக்கும் இலக்கணமாகத்திகழ்ந்து வருவதோடு தமிழர்களின் கலாச்சார கருவூலமாக விளங்குகிறது.
கடந்த 2001ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சி காரணமாக கோயிலின் பழமைமாறாமல் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு கட்டங்களாக மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பினர் ஸ்ரீரங்கம் கோயிலை பார்வையிட்டுச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பழமைமாறாமல் சிறந்த முறையில் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக யுனெஸ்கோ விருது (கன்சர்வேசன் பார் மெரிட் அவார்ட்) வழங்கி பாராட்டியுள்ளது.
கோவிலின் சிறப்புகள்
இந்தியாவிலே திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான் 7 பிரகாரங்களுடன் அமைக்கப்பட்ட கோவிலாகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இங்கு ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.
இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பு பதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரமாகும். இதன் உயரம் 236 அடி, 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது.
இக்கோவிலில் கட்டிடக்கலைக்கு பறைச்சாற்றக்கூடிய அளவில் கோவில் 5ம் சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும், அதில் உள்ள திருமாமணி மண்டபமும், ஷேசராய மண்டபமும் ஆகும்.
வைணவத்திருத்தலங்களில் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது.
திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்” ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்” என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.
இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.
பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்தையடுத்து, கோயில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் பட்டாச்சார்யார்கள், ஊழியர்கள் என அனைவரும் ஸ்ரீரங்கா- ஸ்ரீரங்கா என்று கோஷமிட்டனர். பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.