கொல்கத்தா
ஒரு 96 வயது மூதாட்டியை அவர் மகன் அறையில் வைத்து பூட்டி விட்டு விடுமுறைக்கு சென்றுள்ளார்.
அனந்தபூர் பகுதியில் உள்ள சௌபாகா என்னும் இடத்தில் வசித்து வருபவர் 96 வயதான மூதாட்டி சபிதா நாத். இவர் தனது மகன் விகாஷ் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். இவர் மகன் கடந்த புதன்கிழமை இரவு விடுமுறையைக் கழிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது சபிதா உறங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். உறங்கிய சபிதாவை அதே அறையிலேயே வைத்து பூட்டி விட்டு, வீட்டையும் பூட்டிக்கொண்டு விகாஷ் சென்று விட்டார்.
பாரக்பூர் பகுதியில் வசிக்கும் சபிதாவின் மகள்களில் ஒருவரான ஜெயஸ்ரீ காயல் தன் தாயைக் காண கடந்த ஞாயிறு அன்று அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு விகாஷ் விடுமுறையைக் கொண்டாட சென்றது தெரியாது. வீடு பூட்டி இருந்த போதிலும் உள்ளிருந்து ஏதோ சில சத்தம் கேட்கவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு சபிதா அவர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படுக்கையில் வாந்தி எடுத்த கறைகளுடன் இருந்த அவரை சுத்தப்படுத்தி ஜெயஸ்ரீ பாரக்பூருக்கு அழைத்துச் சென்று விட்டார்.
தனது சகோதரனின் மீது போலீசில் ஜெயஸ்ரீ புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அறையில் அடைக்கப்பட்ட சபீதா, “எனது மகன் விடுமுறையைக் கொண்டாட செல்வது மட்டுமே எனக்கு தெரியும். என்னை அறையில் வைத்து பூட்டி விட்டு அவர் சென்று விட்டார். எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண் அடுத்த நாள் வந்து எனக்கு உணவு அளித்து விட்டு மறுபடியும் எனது அறையைப் பூட்டி விட்டு சென்று விட்டாள். அடுத்த நாளில் இருந்து அவள் வரவில்லை. நான் இரண்டு முறை வாந்தி எடுத்தேன். எழுந்திருக்க இயலாத நிலையில் எனது மகளால் மீட்கப் பட்டேன்” எனக் கூறி உள்ளார்.
”தாயிற் சிறந்த கோயில் இல்லை என்னும் இந்த இந்திய நாட்டில் தற்போது முதியோர்களே பாரம் என நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்மணியை வாந்தி எடுத்த கறைகளுடன் கண்ட போது எங்களுக்கு மனம் மிகவும் துயருற்றது. பெற்றோர்களைக் கூட கவனிக்காத மக்கள் சமுதாயத்தில் பெருகி வருவதையே இது காட்டுகிறது” என அருகில் வசிக்கும் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.