டில்லி:
‘‘பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்ற மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஆலோசனை நடந்தது.
ஆலோசனை முடிவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நவம்பர் 8-ம் தேதி இந்தியாவிற்கு மிகவும் மோசமான நாளாகும். நவம்பர் 8-ம் தேதி கொண்டாப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியால் நாட்டு மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை இது காட்டுகிறது.
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது மிகப்பெரிய ஒரு பேரழிவாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் மோடி அழித்துள்ளார்’’என்றார்.