சென்னை

ரெயிலில் டிக்கட் இன்றி பயணிக்கும் போலீசாரால் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக தமிழ்நாடு போலீஸ் இயக்குனருக்கு தெற்கு ரெயில்வே  தெரிவித்துள்ளது.

ரெயிலில் போலீசார் பணி நிமித்தமாகவோ அல்லது பணி நிமித்தம் இன்றியோ பயணம் செய்யும் போது பயணச்சீட்டுகள் வாங்குவதில்லை என்பது பலரும் தெரிவிக்கும் ஒரு விஷயமாகும்.   பொதுவாக டிக்கட் பரிசோதகர்கள் வரும் போது தங்களின் அடையாள அட்டையை காட்டிவிடுவார்கள்.   இது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  தெற்கு ரெயில்வே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், “பல போலீசார் தாங்கள் பயணிக்கும் போது பயணச்சீட்டு வாங்குவதில்லை.  அதனால் பயணச்சீட்டு வாங்கிய பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையில் இவர்கள் பயணம் செய்கின்றனர்.  பரிசோதகரிடம் தங்கள் அடையாள அட்டையை காட்டி விட்டு பயணத்தை தொடர்கின்றனர்.   எனவே தாங்கள் தங்களுடைய காவலர்களுக்கு சரியான பயணச்சீட்டு வாங்கிய பின் பயணிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.   பயணச்சீட்டு இன்றி பயணம் செய்யும் போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.” என தெரிவித்துள்ளது.

போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், “பணி நிமித்தமாக செல்லும் போது இலவச பயணத்துக்கான வாரண்டுகள் அளிக்கப்படுகின்றன.   லோகல் ரெயிலில் பயணம் செய்யும் போலீசார் சீருடையுடன் பயணிப்பதை இந்தக் கடிதம் குறிப்பிடுகிறது என தோன்றுகிறது   இது வரை எங்களுக்கு யாரும் புகார் அளிக்கவில்லை.  புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுவரை ரெயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கட் எதுவும் போலீசாருக்கு வழங்கப்படவில்லை.   ஆனால் பாதுகாப்புக்காக ரெயிலில் பயணம் செய்யும் காவலருக்கு ரெயில்வே துறை பாஸ் மற்றும் தங்குமிடம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.