மெர்சல் பட விவகாரம் குறித்து, அகில இந்திய அளவில் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், மவுனம் காத்துவந்தார் நடிகர் ரஜினி. ஆனால், நேற்று மெர்சல் படத்தை, நடிகர் கமல்ஹாசன் பார்த்த செய்தி வெளியானதும், ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரஜினி.

மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் வரும் சில காட்சிகள், மத்திய பாஜக அரசின் திட்டங்களை தவறாக சித்தரிக்கிறது என்ற பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அகில இந்திய அளவில் பெரும் பிரச்சினை ஆனது.  ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பா.ஜ.வினருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் மவுனம் காத்த நடிகர்கள் பலரும், நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனாலும் இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் சொல்லாமல் நடிகர் ரஜினி மவுனம் காத்து வந்தார். இது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் எரிச்சலை ஏற்படுத்தியது.

திரையுலகினர் திரை மறைவிலும், ரசிகர்கள் வெளிப்படையாக சமூகவலைதளங்களிலும் ரஜினியை கடுமையாக தாக்கி விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மெர்சல் திரைப்படத்தை நடிகர் கமல் பார்த்தார். இந்த செய்தி வெளியானவுடன், மெர்சல் குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அவசியமான பிரச்சினைகள் படத்தில் அலசப்பட்டுள்ளன. வெல்டன். வாழ்த்துகள்” என்று ரஜினி பதிவிட்டுள்ளார்.

“தனது மவுனத்தை பலரும் விமர்சித்தும் மவுனம் காத்துவந்த ரஜினிகாந்த்.. மெர்சல் படத்தை கமல் பார்த்துவிட்டார் என்றதும் அவசர அவசரமாக கருத்து சொல்லியிருக்கிறார்.

திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும்கூட கமலை போட்டியாக நினைக்கிறார் ரஜினி” என்று திரைத்துறை வட்டாரத்தில் பலரும் பேசி வருகிறார்கள்.