ஜெய்பூர்:

நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான புகார்களை உரிய அனுமதி இன்றி விசாரணை செய்யக் கூடாது என்று ராஜஸ்தான் மாநில பாஜக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது.

1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு குற்றவியல் சட்டங்களின் (ராஜஸ்தான் திருத்தம்) அவசர சட்டம் கடந்த மாதம் 7ம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்ட திருத்தத்தில்‘‘ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் குறித்த விசாரணை தொடங்கும் வரை அது குறித்த செய்திகளை மீடியாக்கள் வெளியிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீதிபதி, மாஜிஸ்திரேட், அரசு பணியில் இருக்கும் ஒரு நபர் மீது விசாரணை நடத்த எந்த மாஜிஸ்திரேட்களும் உத்தரவிட கூடாது.

குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு 180 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அனுமதி கோரிய மனு மீது முடிவு எடுக்கப்படவில்லை என்றால அதன் பிறகு அது தாமாக அனுமதி வழங்கியதாக கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு ஊழியர், அவரது குடும்பத்தினர் புகைப்படம், முகவரி, பெயர் ஆகியவற்றை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் மீதான புகார், குற்றச்சாட்டுக்களை நேரடியாக மீடியாக்கள் வெளியிட முடியாத வகையில் ராஜஸ்தான் அரசு கடிவாளம் போட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.