ஸ்ரீநகர்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் ராணுவத்தினருடன் பிரதமர் தீபாவளியைக் கொண்டாடினார்

நேற்று வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.   மோடி தான் பிரதம்ரான பிறகு தீபாவளிப் பண்டிகையை ராணுவத்தினருடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  நேற்று அவர் எந்த முன் அறிவிப்பும் இன்றி காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான குரஸ் செக்டார் சென்று அங்குள்ள வீரர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அந்த ராணுவ மற்றும் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளையை கொண்டாடினார்.   அவர்களுக்கு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார்.   அந்தப் பகுதியானது பாகிஸ்தான் ஆக்கிரபிப்பு காஷ்மீரை ஒட்டி உள்ளதாகும்.   அந்த இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகம் உள்ளதால் துப்பாக்கி சண்டை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.

மோடி அவர்களிடையே உரையாற்றினார்.  அவர் தனது உரையில்,  “எனக்கு ராணுவத்தினர்தான் குடும்ப உறுப்பினர்கள்.  எனவே எனது குடும்ப உறுப்பினர்களான உங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் மகிழ்கிறேன்.   உங்கள் கடமை உணர்வையும் தியாகத்தையும் மிகவும் பாராட்டுகிறேன்.   ராணுவத்தினரை என்றும் இந்த அரசு மறக்காது.  அவர்களின் நலனுக்காகவே ஒரு பதவி ஒரே ஊதியம் என்னும் திட்டத்தை நிறைவேற்றினோம்.” எனக் கூறியதுடன் பார்வையாளர்கள் புத்தகத்திலும் கருத்தை  குறிப்பிட்டார்.  சுமார் 2 மணி நேரம் வீரர்களுடன் அவர் தீபாவளியைக் கொண்டாடிய போது ராணுவ உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.