சென்னை:
பல்வேறு பிரச்சினைகளை கடந்து நேற்று வெளியானது நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம். விஜய் ரசிகர்களின் ஆதரவுடன் உலகம் முழுவதும் படம் இன்று இரண்டாவது நாளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்த படத்தில், நடிகர் அரசியல் குறித்து சில கருத்துக்கள் தெரிவித்துள்ளதாகவும், அவர் அரசியலுக்கு வர விரும்புவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பிடித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை,
‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான்... ஒரே கியூதான்’ என்று கிழிந்த பர்சை வடிவேலு கதாப்பாத்திரம் காட்டுவது,
‘என்ன இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா’ என்பது போன்ற வசனம் ஆகியவை மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த வசனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தமிழக பாரதியஜனதா கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால், தமிழக்ததில் பாரதியஜனதாவுக்கு எதிரான மக்களின் மனநிலை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பதட்டம் அடைந்துள்ள தமிழக பாரதிய ஜனதாவினர், படத்தில் விஜய் ஜிஎஸ்டி குறித்து பேசும் வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும், அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருகிறார், அந்த வசனங்களை உடனே நீக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்று சமீபத்தில் மோடி தெரிவித்ததில் இருந்து, அத்திட்டம் தோல்வி அடைந்ததை ஆளும் கட்சியே ஒப்புக்கொண்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மேலும், இப்படத்தில் மருத்துவதுறையில் நிகழும் முறைகேடுகள் பற்றி படத்தில் விரிவாக சொல்லியிருக்கும் நிலையில், மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன் எதிர்த்து தெரிவித்திருக்கிறாரே என்று சமூக வலைளதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.