ஐதராபாத்
கடந்த இரு மாதங்களில் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
தற்போது பல மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் மருத்துவக் கல்வி மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேரவும் நீட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வுகான பயிற்சி மையங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் சேர்வதன் மூலம் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதால் நிச்சயம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்னும் நம்பிக்கை பலரிடமும் வளர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் இங்கு பயிலும் மாணவ மாணவிகளை அதிக மதிப்பெண் எடுப்பதற்காக மிகவும் வருத்துவதாகச் சொல்லப்படுகிறது. பயிற்சி மையங்களில் அடிக்கடி மாதிரித் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. இதில் குறைந்த மதிப்பெண்கள் வாங்குபவர்களை கடுமையாக ஆசிரியர்கள் திட்டுவதாகவும், கேவலமாகப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வரும் 17 வயது மாணவி சம்யுக்தா தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணமாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை குறை கூறி உள்ளார். இது போல கடந்த இருமாதஙக்ளில் மட்டும் சுமார் 50 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பு ஒரு மாணவர் இதே போல கடிதம் எழுதி வைத்துவிட்டு ஏழாம் மாடியில் இருந்து குதித்து இறந்தார்.
இந்த நீட் பயிற்சி மையங்களின் மேலாளர்களை தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமின்றி இது குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க குழந்தைகள் நல ஆய்வாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
”ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களைப் பொறுத்த வரை மாணவ மாணவிகள் நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து வருகின்றனர். சென்ற வருடம் மட்டும் இந்த இரு மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 6744 பேருக்கு நுழைவுத் தேர்வு மூலம் இடம் கிடைத்துள்ளது. ஆனால் நுழைவுத் தேர்வு எழுதும் அனைவருக்கும் இடம் கிடைக்காது என்பதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வு கல்வியின் ஒரு அங்கம் மட்டுமே, அதுவே கல்வி அல்ல என்பதை குழந்தைகளுக்கு அவர்கள் புரியவைக்க வேண்டும்’ என மனநல ஆய்வாளர் வீரபத்ரா காண்ட்லா கருத்து தெரிவித்துள்ளார்.