அவுரங்கபாத்,

காராஷ்டிர மாநிலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது  தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், போக்குவரத்து தொழிலா ளர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் பொதுமக்களுக்கு பெரும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாளை  தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வசித்து வரும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதுபோன்ற திருவிழா நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்கும்படி வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநில  போக்குவரத்து துறை தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களுடன் போக்குவரத்து துறைமந்திரி திவாகர் ரவோத் பேச்சு நடத்தினார். ஆனால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஸ் டெப்போக்கள் முன்பு ஊழியர்கள் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எந்த பேருந்தையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்துவதால் பரபரப்பு நிலவுகிறது.

இந்த போராட்டம் காரணமாக தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இது மாநில மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.