மும்பை

ரெயிலில் அளிக்கப்பட்ட உணவை உண்டதால் 26 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள கேண்டீனில் இருந்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.   காலை உணவாக  வெஜிடபிள் கட்லெட்  மற்றும் ஆம்லெட் வழங்கப்பட்டுள்ளது.   மதியம் உணவுக்கு முன்பாக சூப் வழங்கப்பட்டுள்ளது.  சூப் அருந்திய சில நொடிகளில் பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.  சிலருக்கு மயக்கமும் வந்துள்ளது.

ரெயிலில் முதலுதவி அளித்த பின் வழியில் உள்ள சிப்லுன் என்னும் இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டு 25 பெரியவர்களும் ஒரு ஆறு வயதுக் குழந்தையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   நேற்று மாலை சுமார் 3.15 மணிக்கு அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் கேண்டின் ஊழியர்கள்  இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  அது தவிர சூப் வைத்திருந்த பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.   அந்த சூப் பாக்கெட்டுகளை சப்ளை செய்த காண்டிராக்டருக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.