வாஷிங்டன்:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லே மேத்யூ (வயது 37). இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வளர்ப்பு மகள் ஷெரீன் மேத்யூஸ் (வயது 3). இந்நிலையில் கடந்த 7ம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் வீட்டில் இருந்து ஷெரீன் திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
முன்னதாக பால் குடிக்காமல் ஷெரீன் அடம்பிடித்ததால் அந்த சிறுமியை இரவு நேரத்தில் வீட்டின் வெளியே உள்ள மரத்தடியில் நிற்க வைத்து வெஸ்லே கண்டித்துள்ளார். ஷெரீன் மாயமான சில நிமிடங்களில் வெஸ்லே வீட்டில் இருந்த அவரது கார் ஒன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு இடையில் மாயமாகியுள்ளது. இது குறித்து வெஸ்லே போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என்று கண்டறிய முயற்சி செய்தனர். மேலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள், தொழில் செய்வோரிடம் காரின் நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஷெரீனை கடைசியாக பார்த்தவர் வெஸ்லே மேத்யூ மட்டுமே. மேலும், வீட்டை விட்டு சிறுமியை இரவு நேரத்தில் வெளியே அனுப்பி கொடுமை படுத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
எனினும் அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்து மின்னணு முறையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சிறுமி மாயமான விவகாரத்தில் வெஸ்லே மேத்யூ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ? என்று போலீசார் சந்தேகி க்கின்றனர்.