டில்லி,
டில்லியில் காணாமல் போன முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் உ.பி.யில் உள்ள காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 12ந்தேதி டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திடீரென காணாமல் போனது. மர்ம நபர்கள் யாரோ காரை திருடி சென்றுவிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் சிறிய ரக மாருதி வேகன் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். நீலநிறத்தில் உள்ள அந்த கார் கடந்த 12ம் தேதி தலைமை செயலக வளாகத்தில் நிறுத்திவிட்டு, அலுவலக பணிகளை மேற்கொள்ள சென்றார். பணிகள் முடிந்து அவர் வெளியே வந்த போது தனது கார் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பலத்த பாதுகாப்புகளுக்கு மிகுந்த இடமான டில்லி தலைமை செயலகத்தின் முன்பாக நிறுத்தப்பட்ட முதலமைச்சரின் கார் திருடி செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.
இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் காரை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரை மீட்ட போலீசார் அதை டில்லி எடுத்துச்செல்கிறார்கள்.