பாரீஸ்:
தமிழக முன்னாள் முதல்வர் எம்..ஜி.ஆர். எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டுரைகள்’ என்ற பெயரில் புத்தகத்தமாக தொகுத்து பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் நகரில் வெளியிட்டார் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி.
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் – செயின் தெனிஸ் நகரில் உள்ள ‘ஷாலே மார்சல் பால்’ என்ற அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடப்பட்டது. அதேபோல், ‘கண்ணதாசன் பாடல்களே, வாலி பாடல்களே’ என்ற தலைப்பில் இன்னிசை பாட்டு மன்றம், நடனம், வீணை இசை என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் முக்கிய நிகழ்வாக மனித நேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வி அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டுரைகள்’ என்ற புத்தகத்தை சைதை துரைசாமி வெளியிட்டார். இதை பாரிஸ் தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் தசரதன் பெற்றுக்கொண்டார்.
பிறகு சைதை துரைசாமி பேசியதாவது:-
“1980-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் எம்.ஜி.ஆர். என்னை வேட்பாளராக நிறுத்திய போது, நான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரைச் சென்று சந்தித்தேன்.
அப்போது என்னுடைய தோல்வி தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறிய எம்.ஜி.ஆர்., எனக்கு ஆறுதல் கூறும் விதமாக என்னிடம் உனக்கு அடுத்த பெரிய வாய்ப்பு, சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க.வின் முதல் மேயராக உன்னை வெற்றி பெற வைப்பேன். நீ போய் களப்பணியாற்று என்று அன்று சொன்னார்.
அதன்பிறகு அவர் முதல்-அமைச்சராக இருந்த வரை, சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தலே நடைபெறவில்லை. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் நான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டேன். பிறகு, ஜெயலலிதா சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக என்னை அறிவித்து அந்த தேர்தலில் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று நான் வெற்றி பெற்றேன்.
ஆக.. எம்.ஜி.ஆர். அளித்த வாக்குறுதி… பல வருடம் கழித்து அப்படியே நிறைவேறியது. இதில் இருந்து எம்.ஜி.ஆர். அளிக்கும் வாக்குறுதி எக்காலத்திலும் நிறைவேறும் சத்தியசொல் என்பதை உணர முடியும். எம்.ஜி.ஆருடைய கட்டுரைகளோ, பேச்சுகளோ இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. ஆகவே 1972-ம் ஆண்டில் இருந்து அவர் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுப்பை மனித நேய அறக்கட்டளை சார்பில் முதன் முறையாக புத்தகமாக வெளியிடுகிறோம்.
எம்.ஜி.ஆர். தான் சம்பாதித்த எல்லா சொத்துகளையும் மக்களுக்கு தானமாக அளித்தார். மக்களுக்காகவே ஆட்சி செய்தார். அதனால்தான், மறைந்தும் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்றும் வாழ்வார்” என்று சைதை துரைசாமி பேசினார்.
திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேசும்போது, ‘திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நான் பயிற்சி பெற்றதற்கு அன்று முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தான் காராணம்’ என்று நினைவு கூர்ந்தார்.
விழாவில் , ‘இதயக்கனி’ ஆசிரியர் எஸ்.விஜயன், எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடனமாடும் நாமக்கல் எம்.ஜி.ஆர்., லண்டனை சேர்ந்த வெற்றி சுப்பிரமணியம், ஜெர்மனியை சேர்ந்த பிரேம்குமார், பிரான்சை சேர்ந்த ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை வகித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்.