டில்லி:

டில்லி நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷி  மற்றும் வேலைக்காரர் ஹெம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில்  ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மருத்துவ தம்பதிகள் ராஜேஷ் தல்வார்-  நூபுர் தல்வார். இவர்களது மகள் ஆருஷி தல்வாரும், அவர்களது வீட்டில் வேலை செய்த  ஹெம்ராஜும் கடந்த 2008-ம் வருடம் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்கள்.

நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் துப்பு துலக்க முடியாமல் திணறினர்.  ஆகவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

விசாரணை முடிவில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வாரும், நூபுல் தல்வாரும் குற்றவாளிகள் என காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த  2013-ம் வருடத்தில் இருந்து அவர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள்.

இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீட்டில் அனைத்து தரப்பு சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராஜேஷ் தல்வார் அவரது மனைவி நூபுர் தல்வார் ஆகியோரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.