சென்னை,

மிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், அடுத்த 15 நாட்களுக்கு  டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக  ஈடுபட வேண்டுமென்றும், அதற்காக குழுக்களை அமைத்து டெங்குவை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடீஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல்  குறித்து மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம் குறித்தும், டெங்கு காய்ச்சலைக் கண்டறிந்து, அவற்றை குணப்படுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சல் பிரிவுகள், நோய் கண்டறியும் சிறப்பு கருவிகள், போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

ஏற்கனவே 2.10.2017 அன்று முதலமைச்சர் நடத்திய ஆய்வுக்கு பின்பு அனைத்து மாவட்டங்களி லும் டெங்கு ஒழிப்பு தினம் வியாழன் தோறும் கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும், இக்காய்ச்சலால் ஏற்படும் இழப்புகள் வெகுவாகக் குறைக்கவும் தேவையான பல்வேறு கூடுதல் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்கள், குப்பைகூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.  இக்குழு உறுப்பினர்கள் தினந்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கூறிய நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்ப வேண்டும். இப்பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.  பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சுத்தம் செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு நோயினை உருவாக்கும் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், 1939ம் ஆண்டு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அந்த இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்படும் அனைத்து மருத்துவ மனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள்.

மேலும் இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள ஒரு உயர் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர்கள் உடனடியாக மாவட்டத்திற்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.